states

img

பாலியல் புகாரில் தப்ப முயற்சி

கொல்கத்தா, ஜூலை 4 - மேற்கு வங்க ஆளுநராக இருக்கும் சி.வி. ஆனந்த் போஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆளுநர் மாளிகை யில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கடந்த மே மாதம் கொல்கத்தா போலீசாரிடம் புகார் கொடுத்தார். 

ஆனால், தனது அதிகாரம் மற்றும் ஒன்றிய பாஜக அரசின் ஆதரவு மூலம் கொல்கத்தா காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகாமல் சி.வி. ஆனந்த் போஸ் தப்பியோடி வருகிறார்.  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாலியல் புகார் அளித்த பெண் உச்ச நீதிமன்றத்தை முறையிட்டுள்ளார்.

அதில், “361ஆவது பிரிவின் கீழ் தன் மீதான பாலியல்  துன்புறுத்தல் குற்றச்சாட்டிலிருந்து ஆளுநர் தன்னை விடுவித்துக் கொள்ள அதிகாரம் உள்ளதா? 361-ஆவது சட்டப் பிரிவில், போலீசாரின் அதிகாரம் பற்றி எதுவும் குறிப்பிடப்பட வில்லையா? என்பது குறித்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இதுகுறித்து நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். மேலும் மேற்கு வங்க போலீசார் தம்முடைய புகார் பற்றி முழுமையாக விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என பாதிக்கப்பட்ட பெண் மனுவில் கூறியுள்ளார்.

மேலும், “குற்றம்சாட்டப்பட்ட ஆளுநர் பதவியில் இருந்து விலகும் வரை பாதிக்கப்பட்டவர் காத்திருக்க வேண்டும்  என்பது அநீதியானது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.